கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அடி-உதை
திருக்கோவிலூர் அருகே கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அடி-உதை விழுந்தது. அவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஊராட்சி தலைவர் தலைமையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் மே தின சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரளாதிருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராமத்தின் வரவு-செலவு கணக்கு மற்றும் இதர திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திருமால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குப்பை கூட்டுவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனவும், அதை சரிசெய்ய வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஊராட்சி செயலாளர் தாமோதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உண்மைக்கு மாறான தகவலை கூறுவதாக தெரிவித்தார். இதனால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலாளர் தாமோதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருமலை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதை தட்டி கேட்ட ஊராட்சி தலைவர் சரளா திருமாலை கீழே தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த திருமால் ஊராட்சி செயலர் தாமோதரனின் செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்து அவரை தாக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த திருமால் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் சரளா திருமால் தலைமையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி செயலாளர் தாமோதரனை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் திருக்கோயிலூர்- சங்கராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன் மற்றும் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் சரளாதிருமாலிடம் சமரசம் பேசி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.