வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துத்தர வேண்டும்

திருச்சிற்றம்பலத்தில், வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-05-01 20:39 GMT
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலத்தில், வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாரச்சந்தை
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம்-பேராவூரணி சாலையில், திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைதோறும் காலை முதல் இரவு வரை வாரச்சந்தை நடந்து வருகிறது. 
உள்ளூரில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் முதல் வெளியூர்களில் இருந்து விற்பனைக்கு வரும் காய்கறிகள் வரை இந்த வாரச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 
திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த வாரச்சந்தைக்கு வந்து சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறி உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.
சமூக விரோத செயல்கள்
வாரச்சந்தை நடைபெறும் இந்த இடமானது, பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு செல்லும் சாலையும் மண் சாலையாக இருப்பதுடன் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சந்தை நடைபெறும் இடங்களிலும் சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்படுகிறது. 
இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மது அருந்துபவர்களின் இருப்பிடமாகவும் இந்த சந்தை மாறி வருகிறது.  இவை தவிர பல விரும்பத்தகாத சமூக விரோத செயல்களும் இரவு நேரங்களில் சந்தை வளாக பகுதியில் அரங்கேறி வருகிறது.
உயர் மின்கோபுர விளக்கு
எனவே சந்தை நடைபெறும் மையப்பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைத்து தர வேண்டும். சந்தையின் நான்கு பக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முள்வேலி அமைத்து சந்தை நடைபெறும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் அன்னியர்கள் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு நுழைவு கேட் அமைத்து, கண்காணிப்பு கேமரா பொருத்தி தரவேண்டும்
இவ்வாறு பொதுமக்களும், வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்