தகவல் தொழில்நுட்ப உதிரிபாகங்கள் தயாரிக்க ரூ.22,900 கோடி திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்து; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

தகவல் தொழில் நுட்ப உதிரி பாகங்கள் தயாரிக்க ரூ.22,900 கோடியில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-01 20:06 GMT
பெங்களூரு:

ரூ.22,900 கோடிக்கு ஒப்பந்தம்

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் ஐ.எஸ்.எம்.சி. நிறுவனத்துடன் தகவல் தொழில் நுட்ப உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக தொழிற்சாலையை தொடங்குவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது அந்த நிறுவனம் தகவல் தொழில் நுட்ப உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக ரூ.22 ஆயிரத்து 900 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு தொடர்பாக கர்நாடக அரசுடன், அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

1,500 பேருக்கு வேலை வாய்ப்பு

நாட்டிலேயே பெங்களூரு தகவல் தொழில் நுட்ப நகரமாக சிறந்து விளங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் தகவல் தொழில் நுட்ப உதிரி பாகங்கள் (செமி கண்டக்டர்) தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ஐ.எஸ்.எம்.சி நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக ரூ.22,900 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்கிறது. இதற்காக ஒப்பந்தமும் கையெழுத்து ஆகி உள்ளது. இதன்மூலம் 7 ஆண்டுகளில் 1,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கர்நாடகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் தயாராகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம். கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை, அடிப்படை வசதிகள், பிற கட்டமைப்பு வசதிகள் இருப்பது தான். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக கர்நாடகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்