குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்
சீர்காழியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதும மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதும மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலை அரியபிள்ளை குளம், தென்பாதி திருவேங்கடம் பிள்ளை குளம், பிடாரி வடக்கு வீதி தாமரைகுளம், கச்சேரி சாலையில் உள்ள தீர்த்தவாரி குளம் உள்பட பல்வேறு குளங்கள் உள்ளன.
இந்த குளங்கள் தான் சீர்காழி நகர் பகுதிக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது பல்வேறு குளங்களில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடைக்கிறது. இதனால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆகாயத்தாமரைகள்
தற்போது கோடை காலமாக இருப்பதால் குளத்தில் உள்ள தண்ணீர் தினமும் குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் உள்ள குளங்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்ற வேண்டும் என சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளத்தின் பரப்பளவு குறைந்தது
இதுகுறித்து சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் பல்வேறு குளங்களில் குளத்திற்கு நீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குளத்திற்கு நீர் செல்ல வழி இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதைப்போல பல்வேறு குளங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளத்தின் பரப்பளவு குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் உள்ள குளங்களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.