தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு

தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு

Update: 2022-05-01 18:07 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தொழிலாளர்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொழிலாளர் தினம்
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் உத்தரவின்பேரில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை தினமான நேற்று தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன்அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா? என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.
60 நிறுவனங்கள் மீது வழக்கு
மொத்தமாக 29 கடைநிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 18 கடை நிறுவனங்களிலும், 41 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 33 உணவு நிறுவனங்களிலும், 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் ஆக மொத்தம் 82 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.
எனவே மேற்கண்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்