நான் சாதுர்யமானவன், உங்கள் ஆட்டத்தை விட்டுவைக்க மாட்டேன்- பா.ஜனதாவுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

பாலாசாகேப்பை ஏமாற்றிவிட்டீர்கள், நான் சாதுர்யமானவன் உங்கள் ஆட்டத்தை விட்டுவைக்க மாட்டேன் என பா.ஜனதாவுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-01 18:04 GMT
கோப்பு படம்
மும்பை, 
பாலாசாகேப்பை ஏமாற்றிவிட்டீர்கள், நான் சாதுர்யமானவன் உங்கள் ஆட்டத்தை விட்டுவைக்க மாட்டேன் என பா.ஜனதாவுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இந்துத்வா போர்வை
சிவசேனா கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே(பால் தாக்கரே) காலத்தில் இருந்தது போல சிவசேனா தர்போது இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அது சரிதான், பாலாசாகேப் ஏமாற்றப்பட்டார். 
பாலாசாகேப்பை நீங்கள் (பா.ஜனதா) எப்படியெல்லாம் ஏமாற்றினீர்கள் என்பதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் நான் உங்களிடம் கொஞ்சம் சாதுர்யமாக நடந்துகொள்கிறேன். நான் ஏமாளியாக இல்லை. இந்துத்வா என்ற போர்வையில் நீங்கள் விளையாடிய விளையாட்டுகளை அவர் புறக்கணித்தார். ஆனால் நான் அதை புறக்கணிக்க மாட்டேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
புதிய வீரர்கள்
மேலும் நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் புதிய சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “இப்படிப்பட்ட புதிய வீரர்களை நான் கவனிப்பதில்லை. இவர்கள் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள், எந்த மைதானத்தில் விளையாடுகிறார் என்பதை மக்கள் முன்பே பார்த்துள்ளனர். சில சமயங்களில் அவர்கள் மராத்தி விளையாட்டை விளையாடுகிறார்கள், சில சமயங்களில் இந்துத்வா விளையாட்டை கையில் எடுக்கிறார்கள். மக்களும் இதுபோன்ற விளையாட்டுகளை பார்த்துள்ளனர். 
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மற்றும் சினிமா ஹால்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே ஒருவர் இலவசமாக மகிழ்வித்தால், அதை மக்கள் ஏன் அனுபவிக்கக்கூடாது?
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்