ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி விவகாரம்: கிராம சபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு திண்டிவனம் அருகே பரபரப்பு
திண்டிவனம் அருகே ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது அண்டப்பட்டு ஊராட்சி. இதற்கு ஊராட்சி மன்ற தலைவராக அமராவதி விநாயகம் உள்ளார். இங்கு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தலை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.
இதற்கிடையே துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் ஒருவரான செந்தாமரை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, துணைத்தலைவராக செயல்படுவதற்கு உத்தரவு நகல் வாங்கி வந்ததாக ஊராட்சியில் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு பிரச்சினை ஊராட்சியில் நிலவி வருகிறது.
தள்ளுமுள்ளு
இதன் காரணமாக, கடந்த வாரம் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தின் போது, ஊராட்சி தலைவர் தலைமையிலும், அவர் இல்லாமலும் என்று 2 இடங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் சம்பந்தபட்டவர்களை அழைத்து சமாதானம் பேசினர்.
இதையடுத்து, நேற்று கிராமத்தில் ஒரே கிராம சபை கூட்டமாக நடந்தது. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதற்கான நோட்டு புத்தகத்தில் செந்தாமரை ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கான சீல் பயன்படுத்தி கையெழுத்திட முயன்றுள்ளார்.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி விநாயகம் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது இருதரப்பு வாக்குவதமாக மாறி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடன் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.