கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
நல்லவன்பாளையத்தில் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
நல்லவன்பாளையத்தில் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று நல்லவன்பாளையம் ஊராட்சியில் சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தண்டராம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் 1½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அடிப்படை வசதிகள்
அப்போது அவர்கள், கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை. இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து கொடுக்கவில்லை. வரவு- செலவு கணக்கு முறையாக வழங்கவில்லை என்று கூறினர்.
அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாலையில் கூட்டம்
இதையடுத்து நல்லவன்பாளையத்தில் மாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் வேண்டியும், வரவு- செலவு குறித்து விவாதித்தனர். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு பதில் அளித்தனர்.