கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
வால்பாறை
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
வருகை அதிகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறையானது, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இதமான காலநிலை நிலவி வருகிறது.
ஆனால் சமவெளி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இன்று வார விடுமுறை மற்றும் தொழிலாளர் தினத்தையொட்டி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து இருந்தது.
குளித்து மகிழ்ந்தனர்
ஒருபுறம் கோடை மழை பெய்தாலும், மறுபுறம் வெயிலும் ஓரளவுக்கு தொடர்வதால் பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் இல்லை. எனினும் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குளித்து மகிழும் வகையில் தண்ணீர் உள்ள ஒரே ஆறு, கூழாங்கல் ஆறு மட்டும் தான்.
அதன்படி இன்று வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குறைந்தளவே இருந்த தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். ஆனால் அங்கு ஆண்கள், பெண்கள் உடை மாற்ற இட வசதி இல்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.