பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
பொள்ளாச்சி
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் பொள்ளாச்சி போக்குவரத்து துறை மேலாளர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:- பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நேரப்படி மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை மார்க்கமாக செல்லும் பஸ்களை ரேக்கில் போட்ட பிறகு, குறித்த நேரத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் சாலையில் ஒவ்வொரு ஸ்டேஜூக்கு பாலத்தின் மீது செல்லாமல் சர்வீஸ் சாலையில் மட்டுமே சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். அதிவேகமாக பஸ்களை இயக்கக்கூடாது. இது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல்
பயணிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டண பட்டியலின்படியே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் பஸ்சின் அனுமதி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கற்பகம் கலை, அறிவியல் கல்லூரி அருகில் உள்ள சர்வீஸ் சாலையை தவிர்க்காமல் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இயங்காமலும், உரிய திருப்புமுனைக்கு செல்லாமலும், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.