ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-01 16:40 GMT
திருவண்ணாமலை

கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

 திருவண்ணாமலையை அடுத்த சானானந்தல் பகுதியில் கிராம சபை கூட்டத்திற்கு முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பழைய சானானந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்று தண்டோரா போடப்பட்டது. ஆனால் அதில் எங்கு கூட்டம் நடைபெற உள்ளது என்று முறையாக தெரிவிக்கப்படவில்லை. 

வழக்கமாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தான் கூட்டம் நடைபெறும். அதனால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காத்திருந்தும் எந்த பயனும் இல்லை என்றனர். 

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, ஊராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட 4 இடங்களில் எங்கு வேண்டும் என்றாலும் கூட்டம் நடத்தலாம். இதுகுறித்து முறையாக தண்டோரா போடப்பட்டு உள்ளது. 

அதன்படி கூட்டம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில்  100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் போராட்டம் குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது போலீசார் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அல்லது அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளியுங்கள் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்