சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு:தலைமறைவாக இருந்த நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் போலீசில் சரண்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத் நேற்று போலீசில் சரண் அடைந்தார். மேலும் இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

Update: 2022-05-01 16:27 GMT
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத் நேற்று போலீசில் சரண் அடைந்தார். மேலும் இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பிடிவாரண்டு பிறப்பித்த கோர்ட்டு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு அரங்கேறியது. இதுபற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது கலபுரகியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வின்போது முறைகேடு நடந்தது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் அந்த பள்ளியின் உரிமையாளரும், பா.ஜனதா பெண் பிரமுகரான திவ்யா காகரகி, பள்ளியின் தலைமை ஆசிரியர் காசிநாத், கலபுரகி மாவட்டம் அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல், கலபுரகி நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத் மேலகுந்தி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மகாந்தேஷ், ருத்ேரகவுடா பட்டீல், போலீஸ்காரர்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் திவ்யா, மஞ்சுநாத், காசிநாத் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ளவர்கள் போலீசார் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்த கலபுரகி கோர்ட்டு, தலைமறைவாக இருந்த திவ்யா உள்பட 6 பேருக்கு பிடிவாரண்டும் பிறப்பித்து இருந்தது.

என்ஜினீயர் சரண்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த திவ்யாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் புனேயில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த என்ஜினீயரான மஞ்சுநாத்தை போலீசார் தேடிவந்தனர். ஆனாலும் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கலபுரகியில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு மஞ்சுநாத் ஆட்டோவில் வந்தார்.

அப்போது அங்கு இருந்த நிருபர்களிடம், ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் மங்களூருவுக்கு சென்று இருந்தேன். போலீஸ் தேர்வு முறைகேடு விஷயத்தில் போலீசார் என்னை தேடுவது பற்றி அறிந்ததும் மங்களூருவில் இருந்து கலபுரகிக்கு வந்துள்ளேன். போலீசாரிடம் சரண் அடைய உள்ளேன். என் மீது எந்த தவறும் இல்லை’ என்று கூறினார். பின்னர் அவர் சி.ஐ.டி. போலீசார் முன்பு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 பேர் கைது

இதற்கிடையே சி.ஐ.டி. தேர்வு முறைகேடு கலபுரகியில் உள்ள தேர்வு மையத்தில் மட்டும் நடக்கவில்லை என்றும், பெங்களூருவில் உள்ள 5 தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்திருப்பதையும் சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற 545 பேரையும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். இதில் முதற்கட்டமாக 400 பேர் சி.ஐ.டி. போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்கள். 

100 பேர் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜரான 400 பேரில் 27 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவர்களின் ஓ.எம்.ஆர். சீட், கார்பன் காபி வித்தியாசமாக இருந்ததால் அவற்றை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர். 27 பேரில் 22 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள், 5 பேர் கலபுரகியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக மேலும் 12 பேரை நேற்று முன்தினம் பெங்களூரு ஐகிரவுண்டு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 12 பேரையும் 11 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. தேர்வு முறைகேடு தொடர்பாக ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கை, சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவும் ஐகிரவுண்டு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்