122 ஊராட்சிகளில் ரூ98 கோடியில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 122 ஊராட்சிகள் பல்வேறு பணிகளில் ரூ98 கோடியில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2022-05-01 16:12 GMT
தூசி

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 122 ஊராட்சிகள் பல்வேறு பணிகளில் ரூ98 கோடியில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். 

கூடுதல் கலெக்டர் பிரதாப், ஜோதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டிராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா விஜயராகவன் வரவேற்றார்

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

வெம்பாக்கம் ஒன்றியத்தில் சிப்காட் அமைந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு மே தினத்தில் வாழ்த்து சொல்லும் விதமாக மாமண்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி.

 அவருடைய வழியில் வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுதோறும் 6 சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 12,565 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுகிறது. 

ரூ.98 கோடியில் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளில் கடந்த 2021-22-ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 122 ஊராட்சிகளில் பல்வேறு பணிகள் ரூ.98 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை வாழ்வாதாரம், நோயற்ற வாழ்வு, குழந்தைகள் ஆரோக்கியம், அடிப்படை வசதிகளை தன்னிறைவு பெறுதல், சமூக பாதுகாப்பு திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நிறைவேற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புரிசை, சிறு வஞ்சிப்பட்டு மற்றும் புஞ்சை, அரசன்தாங்கள் ஆகிய பகுதிகளில் கூத்துப்பட்டறை மற்றும் தெருக்கூத்து என்று அழைக்கப்படும் பாரம்பரிய கலைகள் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. தற்போது நாம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியில் நாடகங்களை கண்டுகளிக்கிறோம். 

ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை தெருக்கூத்து. இந்தக்கூத்துக்கு பெயர் பெற்ற இப்பகுதியில் ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் இங்கு வந்து தெருக்கூத்து பயில்கிறார்கள்.

தலைவர் கருணாநிதி நாடகங்கள் இயற்றுவதில் வல்லவர். நாடகங்கள் மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிறப்பான பங்கு உண்டு.  கிராம பிரச்சினைகளை முதல்-அமைச்சரே தனி கவனம் செலுத்தி தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இது ஜனநாயகத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.

பண்ணைக்குட்டைகள்

 திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதன்மையாக பண்ணைக்குட்டை அமைத்து முதலிடம் பிடித்த விருதை தமிழக முதல்-அமைச்சரிடம் கலெக்டர்  பெற்றார். 

அவருக்கு இந்த நேரத்தில் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்