படப்பை அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
படப்பை அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள நாவலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு 10 ஏக்கர் நிலத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நாவலூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன் முன்னிலையில் தாசில்தார் கல்யாண சுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் போலீசார் உதவியுடன் 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டிடங்களை இடிக்கும்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் கட்டிடங்களை இடிப்பதற்கு அவகாசம் கேட்டனர். இதற்கு வருவாய்த்துறையினர் அவகாசம் எல்லாம் தர முடியாது என்று தெரிவித்தனர்.
அப்போது சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்படும்போது வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆக்கிரமிப்பாளர்களை கண்டு கொள்வதில்லை. 15 ஆண்டுகளுக்கு மேலாக மவுனமாக இருந்துவிட்டு இப்போது வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடத்தை இடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவரை இடித்து அகற்றும் பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.