பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டு்ம்-எடப்பாடி பழனிசாமி பேட்டி
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி:
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இலவச தையல் பயிற்சி மையம்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடியார் இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜ், மணி, மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப செயலாளர் ராஜ் சத்தியன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், ஒன்றிய குழுத்தலைவர்கள் கரட்டூர் மணி, குப்பம்மாள் மாதேஷ், ஒன்றிய செயலாளர் துரை மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், பேரூர் செயலாளர்கள் சாமி என்கின்ற பழனிசாமி, ஞானசேகர், எடப்பாடி நகர செயலாளர் முருகன், சேலம் மாவட்ட அச்சக கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இந்த தையல் பயிற்சி மையத்தை திறந்து உள்ளோம். இதன் மூலமாக பெண்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கி உள்ளோம். இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுப்பதற்காக அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று தற்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அவரை மாநில கூட்டுறவு வங்கி தலைவராக நியமித்தார். எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை
தற்போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தொடர் மின் வெட்டு காரணமாக பெரும்பாலும் மின்சாரத்தை நம்பியுள்ள தொழிற்சாலைகள், விசைத்தறி தொழில் மற்றும் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிக கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.
அதே போல பெட்ரோல், டீசல் விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் மத்திய அரசை குறை கூறுகின்றனர். இருந்தபோதிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
இதனால் இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் பயன் பெற செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் தேர்த்திருவிழாவில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை (திங்கட்கிழமை) நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வமும் செல்ல இருக்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.