செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை முகாம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமினை பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தொடங்கி வைத்தார். முகாமில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவைகளை, அவற்றின் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு, குடற்புழு நீக்க சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டார். இதில் பெரம்பலூர் மண்டல கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், துணை இயக்குனர் குணசேகரன், கோட்ட உதவி இயக்குனர் மும்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பெரம்பலூர் அரிமா சங்கம், மாவட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.