ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் தாய்-மகன் உள்பட 4 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் தாய், மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் தாய், மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
தாய்-மகன்
நாமக்கல் ஓமலூர் ரோட்டைச் சேர்ந்தவர் சந்தோஷ்சிங் (வயது 38). இவர் அங்கு பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு காசிகா (12), யோஷிஜா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
சந்தோஷ்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர், அவரது தாய் தாராபாய் (58) ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று மாலை நாமக்கல் சென்று கொண்டு இருந்தனர்.
சாவு
காரை சந்தோஷ்சிங் ஓட்டினார். அவரது அருகில் தாய் தாராபாய் அமர்ந்திருந்தார். காரின் பின்புற இருக்கையில் திவ்யா, காசிகா, யோஷிஜா ஆகியோர் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிக்கோவில் பிரிவு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியின்மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி சந்தோஷ்சிங், தாராபாய் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். திவ்யா படுகாயம் அடைந்தார். காசிகாவும், யோஷிஜாவும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
படுகாயம்
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சந்தோஷ்சிங், தாராபாய் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த திவ்யா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானிசாகர்
இதேபோல் பவானிசாகர் பகுதியில் நடந்த விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்தவர் அஜித் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் அருண் (23). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். அஜித், அருண் ஆகியோர் தங்களுடைய 4 நண்பர்களுடன் கிருஷ்ணகிரியில் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலாவாக நேற்று புறப்பட்டனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 2 பேர் அமர்ந்து சென்றனர். அஜித் மற்றும் அருண் ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை அருண் ஓட்டினார். அவருக்கு பின்னால் அஜித் உட்கார்ந்து இருந்தார்.
2 வாலிபர்கள் பலி
நேற்று காலை 7.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த அக்கரைதத்தப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்த சரக்கு வேனும், அருண், அஜித் சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் அருண், அஜித் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்ததும் மற்ற நண்பர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.