கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் மனு வழங்கி நிவாரணம் பெறலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் மனு வழங்கி நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-30 21:40 GMT
ஈரோடு
கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் மனு வழங்கி நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
நிவாரணம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.inஎன்ற இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 2 ஆயிரத்து 626 மனுக்கள் பெறப்பட்டு 2 ஆயிரத்து 208 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 378 மனுக்கள் இருமுறை பதிவு போன்ற பிறகாரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
30 நாட்களுக்குள் தீர்வு
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் அதாவது வருகிற மே மாதம் 18-ந்தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 20-ந்தேதிக்கு பின்னர் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனுசமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்துகொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்