2-வது நாளாக 200 லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்
மண் ஏற்றி செல்வதற்கு நடை சீட்டு வழங்காததால் 2-வது நாளாக 200 லாரிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருப்பரங்குன்றம்,
மண் ஏற்றி செல்வதற்கு நடை சீட்டு வழங்காததால் 2-வது நாளாக 200 லாரிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நடை சீட்டு பிரச்சினை
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரசர் குவாரிகள் மூலமாக மணல், எம் சாண்ட் ஆகியவற்றை லாரிகளில் ஏற்றி அதை உரிய இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதற்கு கனிம வளத்துறையில் பாஸ் பெற்று நடை சீட்டு வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கிரசர் குவாரிகளில் நடை சீட்டு வழங்குவதை தவிர்த்து வருகின்றனர்.
இதே சமயம் ஜி.எஸ்.டி.பில்லுடன் மணல், எம் சாண்ட்டை லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.இந்த நிலையில் அதிகாரிகள் அடிக்கடி லாரிகளை வழிமறித்து சோதனை செய்வதோடு லாரிகளை பறிமுதல் செய்கின்றனர். சில சமயங்களில் டிரைவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்
இதனால் சமீபகாலமாக லாரி பணிகள் பெரும் பாதிப்பதோடு டிரைவர்கள், கிளீனர்கள் குற்றவாளிகளாக உருவாகும் நிலை உருவாகி வருகிறது. நடை சீட்டு வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.இத்தகைய நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் மணல்,, எம்சாண்ட் ஏற்றி வரும் லாரிகளுக்கு உரிய கிரசர் குவாரிகள் மூலம் முறையான நடை சீட்டு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்டம் முழுவதுமாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 29-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக போராட்டம்
அதன் ஒரு பகுதியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தனக்கன்குளத்தில் நான்குவழிச்சாலை அருகே ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். இதில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் பலர் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2 நாட்களாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது.
இதனையொட்டி சாலை மேம்படுத்துதல், கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் சுமுக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.