கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
தஞ்சையில், குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை வெட்டிக் கொன்ற மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில், குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை வெட்டிக் கொன்ற மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
தஞ்சை நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கரும்பாயிரம்(வயது 46). இவர், திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள். இவர்களில் முதல் மனைவி ராதிகா(38) தனது மகன்கள் ஜீவா(23), விக்ரம்(20) ஆகியோருடன் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார்.
கரும்பாயிரம், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் 2-வது மனைவி சிவசங்கரியுடன்(36) குடும்பம் நடத்தி வந்தார். இதனால் ராதிகா தனது குடும்பத்தை நடத்துவதற்காக சிங்கப்பூருக்கு சென்று வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து ராதிகா தஞ்சைக்கு திரும்பி வந்தார்.
மனைவியை தாக்க முயற்சி
இதை அறிந்த கரும்பாயிரம், திருப்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சையில் உள்ள முதல் மனைவி ராதிகா வீட்டிற்கு வந்தார். அப்போது தனது 2-வது மனைவியையும் தஞ்சைக்கு அழைத்து வரப்போவதாக கூறியதால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கரும்பாயிரம், ராதிகாவை தாக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கிருந்தவ அவரது உறவினர்கள் கரும்பாயிரத்தை தடுத்தனர். இருந்தாலும் ஆத்திரம் தீராத கரும்பாயிரம் மண்வெட்டியை எடுத்து கொண்டு உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என கூறி கொண்டு வீதியில் சுற்றி வந்தார்.
அரிவாளால் வெட்டிக்கொலை
இதனால் கோபம் அடைந்த ஜீவா தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தை கரும்பாயிரத்தை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கோவிலின் முன்பு குடிபோதையில் கரும்பாயிரம் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு சென்ற ஜீவா தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக கரும்பாயிரத்தை வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
தனிப்படையினரிடம் சிக்கிய 3 பேர்
இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், கரும்பாயிரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கொலையாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை அருகே சந்தேகப்படும்படி 3 பேர் நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தான் கரும்பாயிரத்தை கொலை செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாரிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
கைது
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் மானோஜிப்பட்டி ராஜராஜன் 2-வது தெருவை சேர்ந்த பெர்கின்ஸ்(23), மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 5-வது தெருவை சேர்ந்த அந்தோணி ஆகாஷ்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.