50 லட்சம் தொழிலாளர்களின் நலன் கருதி பனை மரத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
50 லட்சம் தொழிலாளர்களின் நலன் கருதி பனை மரத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
சிவகங்கை, மே.1
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் மாநில பொதுச்செயலாளர் அர்ஜுனன் தலைமையிலும், மாநில தலைவர் மாரிமுத்து, முன்னிலையிலும் நடைபெற்றது. மாநில செயலாளர் முருகன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் மதுரை வீரன், பாலகிருஷ்ணன், முருகேசன் மற்றும் முகவை மலைச்சாமி, அய்யனார், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் உபரியாக கடலுக்கு செல்லும் நீரை கால்வாய்கள் மூலம் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயன்படுத்த மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ரூபாயையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னை மரத்திலிருந்து நீரா பானம் இறக்க 2019 அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு அமைத்த நீதிபதி சிவசுப்பிரமணியன் ஆணையம் கள் இறக்க அனுமதிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. எனவே தமிழக அரசு 50 லட்சம் தொழிலாளர்களின் நலன் கருதி கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.