தொழிலாளி குத்திக்கொலை
குண்டடம் அருகே பணத்தகராறில் வெங்காய அறுவடைக்கு வந்த தொழிலாளி மற்றொரு தொழிலாளியால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
குண்டடம்
குண்டடம் அருகே பணத்தகராறில் வெங்காய அறுவடைக்கு வந்த தொழிலாளி மற்றொரு தொழிலாளியால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள கத்தாங்கண்ணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம், விவசாயி. இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்த செல்லாண்டி (வயது 38), சிவகங்கை மாவட்டம் கலாப்பூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (22)உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் வெங்காய அறுவடைக்கு வந்தனர். இவர்கள் சுப்பிரமணி தோட்டத்திலேயே தங்கியிருந்து வெங்காய அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில் செல்லாண்டியிடம் அருண்பாண்டியன் ரூ.200 கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தான் வாங்கிய கடனை செல்லாண்டி திரும்ப கேட்டதாக தெரிகிறது.
குத்திக்கொலை
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பானது. தகராறு முற்றிய நிலையில் வெங்காயம் அறுவடை செய்ய பயன்படுத்தும் கத்தியால் அருண்பாண்டியன் செல்லாண்டியை குத்தினார். இதில் நெஞ்சில் கத்தி குத்தியதில் சம்பவ இடத்திலேயே செல்லாண்டி பரிதாபமாக இறந்தார்.
அதை பார்த்ததும் அருண்பாண்டியன் தப்பியோடி விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குண்டடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.