இலங்கை மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்- வடக்கு மாகாண கவர்னர் பேட்டி

“பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதயை சூழலில் இந்திய அரசு இலங்கை மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்” என்று இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா கூறினார்.

Update: 2022-04-30 16:09 GMT
திருச்செந்தூர்:
“பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதயை சூழலில் இந்திய அரசு இலங்கை மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்” என்று இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா கூறினார். 

சாமி தரிசனம்
இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா நேற்று முன்தினம் திருச்செந்தூர் வந்தார். அவர் கோவில் வாசல் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார். 
நேற்று காலை 8.40 மணிக்கு அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த கஷ்ட காலத்தில், மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்.
இந்தியாவிடம் இருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகள் தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும். இந்தியா போல் மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்