வீட்டில் பீரோவை உடைத்து 13 பவுன் தங்க நகை திருட்டு
தூத்துக்குடியில் வீட்டின் பீரோவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கீழ கூட்டுடன்காடு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி முருகேஸ்வரியும் (வயது 31), தாய் குருவம்மாளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி இரவு முருகேஸ்வரி தனது மாமியார் குருவம்மாளுடன் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி, இதுபற்றி புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தியபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.