ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 31 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 31 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-29 23:16 GMT
மணப்பாறை:

ஜல்லிக்கட்டு போட்டி
மணப்பாறையை அடுத்த கே.உடையாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனிமாதா ஆலயம் முன்பு 5-ம் ஆண்டாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மணப்பாறை தாசில்தார் கீதாராணி கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகள் களத்தில் நின்று, அடக்க வந்த வீரர்களை விரட்டி அடித்தன. மாடுபிடி வீரர்களும் தங்களின் வீரத்தை வெளிப்படுத்திடும் வகையில் காளைகளை பிடித்து அடக்கினர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
31 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 675 காளைகள் களம் கண்டன. இதேபோல் 270 மாடுபிடி வீரர்கள் களத்தில் ஒவ்வொரு குழுக்களாக இறங்கினர். காளைகள் முட்டியதில் 31 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிலர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் திரண்டு வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்