ராணுவ வீரர், மனைவிக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் ஆறுதல்
ராணுவ வீரர், மனைவிக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.
திருச்சி:
தாலிச்சங்கிலி பறிப்பு
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள பேரூர் கிராமம் குடித்தெருவை சேர்ந்தவர் நீலமேகம். மத்திய துணை ராணுவப் படை (சி.ஆர்.பி.எப்.) வீரரான இவர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியில் உள்ளார். இவரது மனைவி கலைவாணி (வயது 28) கடந்த 27-ந் தேதி இரவு பேரூரில் உள்ள வீட்டில் தனது மாமியாருடன் தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றார். இதில் காயமடைந்த கலைவாணி முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து இ.பி.கோ. சட்டம் 453, 394 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக புலன் விசாரணையை தொடங்கினர்.
டி.ஜி.பி. ஆறுதல்
இந்நிலையில் ராணுவ வீரர் நீலமேகம், தனது வீட்டில் நடைபெற்ற தாலிச்சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து ஒரு வீடியோ பதிவில் பேசி, அதனை சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். அதில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
வீடியோ பதிவு குறித்து தெரிந்தவுடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பாதிக்கப்பட்ட கலைவாணி மற்றும் துணை ராணுவப் படை வீரர் நீலமேகம் ஆகியோரை தொலைபேசி வழியாக உடனடியாகத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறியதோடு, சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்ற உறுதிமொழியை அளித்துள்ளார்.
சிறப்பு தனிப்படை
அதன்படி, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 8 பேர் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தேக நபர்கள் சிலரிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று ஐ.ஜி. பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கலைவாணியை, போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்றும் உறுதி அளித்தார்.
ராணுவ வீரர் வீடியோவில் உருக்கம்
தாலிச்சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து ராணுவ வீரர் நீலமேகம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அவர் பேசியிருப்பதாவது:-தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருக்கு தெரிவித்து கொள்வது, என்பெயர் நீலமேகம். திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமம் குடித்தெருவில் வசித்து வருகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக சி.ஆர்.பி.எப். என்ற துணை ராணுவ படையில் பணியாற்றி வருகிறேன். தற்போது காஷ்மீரில் பணி செய்து வருகிறேன்.எனது கிராமத்தில் மனைவி மற்றும் வயதான அப்பா, அம்மா மற்றும் எனது 10 மாத பெண் குழந்தை ஆகியோர் கடந்த 27-ந் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், எனது மனைவி கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு சென்றுள்ளான்.நான் ஆண்டுக்கு 2 அல்லது 3 முறைதான் சொந்த ஊருக்கு சென்று வரமுடியும். கொஞ்ச நாள்தான் வீட்டில் இருக்கும் சூழல் எனக்கு உள்ளது. மீதி நாட்கள் பணியில்தான் இருக்கிறேன். எங்களது வீட்டிற்கே பாதுகாப்பு இல்லாதபோது, எப்படி ராணுவத்தில் நிம்மதியாக பணி செய்ய முடியும்?. எனவே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த காணொலியை பார்த்துவிட்டு குற்றவாளியை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்ஹிந்த்.
இவ்வாறு அவர் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.