வீட்டு சுவரில் அடித்து குழந்தை கொலை; மனநலம் பாதித்த தாய்மாமா கைது..!!
மைசூரு டவுனில், வீட்டு சுவரில் அடித்து குழந்தையை கொன்ற தாய்மாமாவான மனநலம் பாதித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மைசூரு:
8 மாத ஆண் குழந்தை
மைசூரு டவுன் வித்யாரண்யபுரம் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஆண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குழந்தையின் தாய்மாமன் ராஜூ(வயது 33). அதாவது ராஜூவுக்கு, உடன் பிறந்த அக்காளின் குழந்தை ஆகும். இதில் ராஜூ, மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இவர், தனது அக்காளுடன் வசித்து வந்தார்.
வீட்டு சுவரில் அடித்து கொலை
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் ராஜூவிடம், அவரது அக்காள் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சமையலறைக்கு சென்று வேலை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி குழந்தை, ராஜூவுடன் விளையாடி மகிழ்ந்ததாக தெரிகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் மனநலம் பாதித்த ராஜூ திடீரென குழந்தையை தூக்கி வீட்டு சுவரில் கொடூரமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுதுள்ளது. மேலும் சிறிதுநேரத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இதற்கிடையே அக்காள், அவரது கணவர் வந்துள்ளனர். அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், சுவரில் ரத்தம் படிந்து இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அப்போது தான் அவர்களுக்கு, ராஜூவே குழந்தையை சுவரில் அடித்து கொன்றது தெரியவந்தது.
கைது
இதுபற்றி வித்யாரண்யபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராஜூ மனநலம் பாதித்து இருப்பதால், குழந்தையை வீட்டு சுவரில் அடித்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து ராஜூவை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.