தி.மு.க. உள்கட்சி தேர்தலில் திடீர் மோதலால் பரபரப்பு

நெல்லையில் நடந்த தி.மு.க. உள்கட்சி தேர்தலில் திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-29 20:21 GMT
நெல்லை:
நெல்லையில் நடந்த தி.மு.க. உள்கட்சி தேர்தலில் திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

தி.மு.க. உள்கட்சி தேர்தல்

தமிழகத்தில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. உள்கட்சி தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

நெல்லை மாநகரில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் 21 நிர்வாகிகள் வீதம் மொத்தம் 55 வார்டுகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தி.மு.க. சட்டத்துறை மாநில துணை செயலாளர் கண்ணதாசன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு, வேட்புமனுக்களை பெற்றார்.

இரு தரப்பினர் மோதல்

இந்த நிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் தி.மு.க.வை சேர்ந்த 2 தரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, அனைத்து தரப்பினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தனர்.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீஸ்காரர் உலகு சங்கர் லேசான காயமடைந்தார். அவர் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் நின்றிருந்த தொண்டர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சிலர் வெளியே செல்ல மறுத்தனர். அவர்களை போலீசார் வெளியே செல்லுமாறு கூறி தள்ளினர். இதில் தி.மு.க. நிர்வாகி மைதீன் மல்கர் கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கும், தி.மு.க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்