5 மாத குழந்தையை விற்ற வழக்கில் தந்தையும் கைது

உவரியில், 5 மாத குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தந்தையும் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-29 20:18 GMT
திசையன்விளை:
உவரியில், 5 மாத குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தந்தையும் கைது செய்யப்பட்டார்.

குழந்தை விற்பனை

நெல்லை மாவட்டம் உவரி அண்ணா நகரை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி தங்கசெல்வி. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் இறந்து விட்டார்.

இதையடுத்து தங்கசெல்வி, உவரி அண்ணாநகரை சேர்ந்த அர்ஜூன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து செய்தார். இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்கசெல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து தங்கசெல்வி வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு கூட்டப்பனை சுனாமி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரியப்பன் என்பவர் பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்.இதன்பின்னர் மாரியப்பன், கேரள மாநிலம் கோட்டயம் அர்பூர் கராவில் வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் கடகுளத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி செல்வகுமார்- சந்தன வின்சியா ஆகியோரிடம் குழந்தையை விற்றுள்ளார்.

மீட்பு

அந்த தம்பதியினர் குழந்தையை கோட்டயம் ஆஸ்பத்திரிக்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த குழந்தை விலைக்கு வாங்கப்பட்டதும், அவருடைய பெற்றோர் விவரமும் தெரியவந்தது.  இதையடுத்து கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் நெல்லையில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சர்ச்சிசுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சர்ச்சிஸ் உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்தார். 

கேரளாவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக குழந்தையின் தாய் தங்கசெல்வி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி செல்வகுமார்-சந்தன வின்சியா, குழந்தையை விற்பனை செய்த மாரியப்பன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று குழந்தையின் தந்தை அர்ஜூனையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்