அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்ட ஆட்டை இரவில் உண்ண வந்த சிறுத்தை
அடித்து கொன்ற மரத்தில் தொங்க விட்ட ஆட்டை இரவில் உண்ண சிறுத்தை வந்தது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டு. இவர் கடந்த 27-ந்தேதி தனது ஆடுகளை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. பின்னர் அவர் அந்த ஆட்டை தேடிச் சென்றபோது, அந்த ஆட்டை சிறுத்தை அடித்து கொன்று, மரத்தில் தொங்க விட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், ஆடு இறந்து தொங்கியவாறு கிடந்த மரத்தின் அருகில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர்.
இந்த நிலையில் இறந்த ஆட்டை உண்பதற்காக இரவில் சிறுத்தை மீண்டும் வந்தது. மரத்தில் தொங்கியவாறு கிடந்த ஆட்டை சிறுத்தை தின்றது. இந்த காட்சியானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை ஊருக்குள் புகும்நிலை இருந்தால், அதனை கூண்டு வைத்து பிடித்து செல்வோம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.