நாகர்கோவிலில் இரவில் பயங்கரம் கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை

நாகர்கோவிலில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-04-29 20:00 GMT
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கட்டிட தொழிலாளி
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளை தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 46). கட்டிட தொழிலாளியான இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவியும், உஷா என்ற மகளும், ராஜா என்ற மகனும் உள்ளனர். உஷாவுக்கு திருமணமாகி, கணவருடன் வசித்து வருகிறார். ராஜா வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
முருகன் கட்டிட வேலைக்கு சென்று திரும்பும் போது மது அருந்துவது வழக்கமாம். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது அவருடன் இன்னொரு கட்டிட தொழிலாளியும் மது அருந்தியுள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவர் நாகர்கோவில் அறுகுவிளை பகுதியிலேயே வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
மது அருந்திய போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் முருகன் அறுகுவிளை பகுதியில் தனது வீட்டுக்கு சிறிது தொலைவில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் முருகனின் பின்புறமாக ஓடி வந்து வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். உடனே அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
கொலை
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை சூப்பிரண்டு நவீன்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் முருகனின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அரிவாள் பறிமுதல்
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தான் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எனவே நெல்லையை சேர்ந்த கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
மேலும் கொலையாளி பயன்படுத்திய அரிவாள், முருகன் வந்த சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி வடசேரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்