கிணற்றில் விழுந்து பள்ளி மாணவர் சாவு
காளையார்கோவில் அருகே கிணற்றில் விழுந்து சிறப்பு பள்ளி மாணவர் இறந்தார்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே உறுதிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் கார்த்திக் என்ற சந்தீப் (வயது 19).காளையார்கோவில் அருகே உள்ள புனித குவனெல்லா அன்பக சிறப்புப் பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஆட்டோவில் பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. காணாமல் போன சந்தீப்பை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குவனெல்லா அன்பகம் சிறப்பு பள்ளி வளாகத்திற்கு வெளியில் உள்ள தனியார் திறந்தவெளி கிணற்றில் சந்தீப் பிணமாக மிதந்தார். கிணற்றில் மாணவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அழகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------