பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் கொள்முதல் செய்யக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
மயிலாடுதுறை:
நாகம்பாடி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில் நாகம்பாடி, கீழமூலை, ஸ்ரீகண்டபுரம், பாலையூர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் எங்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக குழு கடன், வங்கி கடன் பெற்று கறவை மாடுகள் வாங்கி பால் விற்பனை செய்து வருகிறோம். பாலின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து பணம் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் பால் உற்பத்தி குறைந்ததால் தூரம் அதிகமாக இருக்கிறது என்று காரணம் காட்டி திடீரென்று பால் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் கடன் வாங்கி மாடு வாங்கியவர்கள் பாலை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால், வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, ஆவின் நிறுவனம் தங்கள் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தொடர்ந்து பால் கொள்முதல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது