அரசம்பட்டி அருகே குடிநீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு

அரசம்பட்டி அருகே குடிநீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-29 17:36 GMT
மத்தூர்:
அரசம்பட்டி அருகே குடிநீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி ஊராட்சியில் ஏ.மோட்டூர், பஞ்ச மோட்டூர், கொட்டாவூர் அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சீரான குடிநீர் வழங்க கோரி நேற்று சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பெண்கள் ஒப்பாரி
மேலும் பெண்கள் காலிக்குடங்களுடன் தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சீரான குடிநீர் வழங்கவில்லை என்றால் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்