வட மாநிலங்களை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு தமிழகத்தை நம்பி உள்ளனர் தர்மபுரியில் பொன்குமார் பேட்டி
வட மாநிலங்களை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு தமிழகத்தை நம்பி உள்ளனர் என்று தர்மபுரியில் பொன்குமார் தெரிவித்தார்.
தர்மபுரி:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக கவர்னரின் செயல்பாட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றபட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமலும் மத்திய அரசுக்கு அனுப்பாமலும் காலதாமதம் செய்வது தமிழக கவர்னரின் வரம்பு மீறிய செயலாகும். தமிழக அரசின் அனுமதியின்றி உயர்கல்வித்துறை அமைச்சரை அழைக்காமல் தன்னிச்சையாக துணைவேந்தர்கள் கூட்டத்தை கவர்னர் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும், நீதித்துறையை நிலைநாட்டவும் முதல்- அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தி மொழி பேசும் வட மாநிலங்களைச் சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழகத்தை நம்பி உள்ளனர். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஏட்டிக்கு போட்டியாக அதிகார மீறலில் ஈடுபடுவதும் மாநில அரசுக்கு போட்டியாக ஒரு அரசை நடத்த முயல்வதும் ஏற்புடையதல்ல. எனவே தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒரு பார்வையும், பிற மாநிலங்களில் ஒரு பார்வையும் மத்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல. அனைத்து மாநிலங்களையும் ஒரே பார்வையுடன் சரிசமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.