ரூ.7½ கோடியில் வளர்ச்சி பணிகள்
வால்பாறையில் ரூ.7½ கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் ரூ.7½ கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்
வால்பாறையில் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலை எஸ்டேட் நிர்வாகத்தினருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டேட் பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும், குறிப்பாக தெருவிளக்கு, சாலை வசதி மேற்கொள்ள உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு எஸ்டேட் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.
விவாதம்
இதையடுத்து நடந்த மன்ற கூட்டத்தில், நகராட்சி சார்பில் அனைத்து வார்டு பகுதிகளிலும் ரூ.7 கோடியே 43 லட்சத்தில் சாலை அமைத்தல், சத்துணவு மையம் கட்டுதல், பயணிகள் நிழற்குடை அமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல், படிக்கட்டுகள் கட்டுதல், குடிநீர் குழாய் அமைத்தல், மயானக்கூரை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக ஒவ்வொரு வார்டு பகுதியிலும் 20 தெருவிளக்கு, 3 மினி உயர் கோபுர மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.