டிராக்டரில் ஆற்று மணல் கடத்தியவர் கைது
விளரத்திகுளம் அருகே வேம்பாரில் டிராக்டரில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியில், சூரங்குடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கன்னிராஜபுரம் கிராமத்தில் இருந்து வேம்பார் நோக்கி, வாகனப் பதிவு எண் இல்லாமல் டிராக்டர் ஒன்று வந்தது. போலீசார் சந்தேகமடைந்து அந்த டிராக்டரை நிறுத்த முயன்றனர். ஆனால், டிராக்டர் நிற்காமல் வேகமாக சென்றது. அதில் சிலர் ஆற்றுமணல் கடத்தி செல்வதை பார்த்த போலீசார், டிராக்டரை பின்தொடர்ந்து சென்றனர். இதை கவனித்த மணல் கடத்தல்காரர்கள், ஆற்று மணலை சாலையின் அருகிலேயே கொட்டிவிட்டு, டிராக்டரை எடுக்க முயன்றனர். அப்போது போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது மணலை கடத்தி வந்த செல்லத்துரை, முனீஸ் ஆகியோர் தப்பியோடி விட்டனர். ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் வடக்குசெவல் சங்கர் என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.