மாணவிகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் சமூகவலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுடன் ‘கேக்' வெட்டி ஆசிரியர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுடன் ‘கேக்' வெட்டி ஆசிரியர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வகுப்பறையில்...
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனது பிறந்த நாளை மாணவிகளுடன் வகுப்பறையில் ‘கேக்' வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அதாவது வகுப்பறையில் ஆசிரியரின் மேஜை மீது ‘கேக்' வைக்கப்பட்டுள்ளது. அந்த ‘கேக்'கை வெட்டும் படி மாணவிகள் ஆசிரியரிடம் கூறுகிறார்கள்.
‘கேக்’ வெட்டிய ஆசிரியர்
உடனே ஆசிரியர் ‘கேக்' வெட்டுகிறார். மாணவிகள் சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தபடி ஆசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள். அப்போது வெடி வெடிப்பது போன்று சத்தம் கேட்கிறது. பூக்களை தூவியது போல் வண்ண, வண்ண தாள்கள் ஆசிரியர் மீது விழுகிறது.
பின்னர் வெட்டிய கேக்கை கையில் எடுத்த ஆசிரியர், எந்த மாணவிக்கு வழங்கலாம் என பார்த்து கொண்டிருந்த போது வீடியோ கட்டாகி விடுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ எடுத்த ஒரு மாணவி தான் சமூக வலைத்தளத்தில் இந்த பிறந்த நாள் காட்சியை பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வகுப்பறையில் மாணவிகளுடன் ஆசிரியர் பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாக கல்வித்துறை சார்பில் விசாரணையும் நடந்து வருகிறது.
-------------