“மின்வெட்டு இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்” - பிரேமலதா
“மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார்.
தூத்துக்குடி:
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான வழிகளை சொல்லாமல் மத்திய, மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகிறார்கள். ஆனால், மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் அரசுகள் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகின்றன. எனவே, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பிரச்சினை தொடங்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அதுபோல சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக ஒரு பகுதி கருகி சேதமடைந்து உள்ளது. இவ்வாறு மின்வெட்டு பிரச்சினை, மின்விபத்து என மக்கள் மின்சாரத்தால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது உண்மை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்சினை இருக்கும் என்பது அனைத்து மக்களிடமும் பரவலாக காணப்படும் கருத்தாக உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது மின்வெட்டு பிரச்சினை தொடங்கி உள்ளது. இந்த பிரச்சினையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, தி.மு.க ஆட்சியிலும் மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்ததும் அவைகளை மறந்துவிடுவதும் வாடிக்கையாக தொடர்கிறது. இருந்தாலும் இரண்டு கட்சிகளுக்கும் தான் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விரல் புரட்சி மூலம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.