கொடைக்கானலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணி தொடக்கம்
கொடைக்கானலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர் பகுதிக்கு, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அணை மற்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மனோரஞ்சிதம் புதிய அணை ஆகியவற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கீழ் குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டு, அங்கிருந்து தண்ணீர் பழைய அணைக்கு கொண்டுவரப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் தண்ணீர் கடந்த பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே புதிய நகர்மன்றம் பொறுப்பேற்றவுடன், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி, பழைய அணையை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் குடிநீரை சுத்திகரிப்பு செய்து, கொடைக்கானல் நகர் பகுதிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. சுத்திகரிக்கும் பணியை நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் நாராயணன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், உதவி பொறியாளர் செல்லத்துரை உள்பட அதிகாரிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். நகர் பகுதிக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.