மாணவர்களை பின்தொடர்ந்து வந்த காட்டு யானை

கன்னிவாடி அருகே மலைப்பாதையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்களை ஒற்றை காட்டு யானை பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தியது. அப்போது மாணவர்கள் பாறை மீது ஏறி உயிர் தப்பினர்.

Update: 2022-04-29 14:37 GMT
கன்னிவாடி:
கன்னிவாடி அருகே மலைப்பாதையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்களை ஒற்றை காட்டு யானை பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தியது. அப்போது மாணவர்கள் பாறை மீது ஏறி உயிர் தப்பினர்.
ஒற்றை காட்டு யானை
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிவாடி, பண்ணைப்பட்டி, அழகுமலை, பன்றிமலை, தருமத்துப்பட்டி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் அவை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் அழகுமலை பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பன்றிமலை செல்லும் மலைப்பாதையில் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஒற்றை காட்டுயானை பிளிறியபடி வந்தது. மாணவர்கள் திரும்பி பார்த்தபோது, அந்த யானை அவர்களை பின்தொடர்ந்து வேகமாக வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் மலைப்பாதை ஓரத்தில் இருந்த பெரிய பாறை மீது ஏறி மாணவர்கள் தப்பினர். பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகே மாணவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
கிராம மக்கள் புகார்
இதற்கிடையே இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.  
இதைத்தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களை பின்தொடர்ந்து வந்து காட்டு யானை அச்சுறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்கி யானை வரவழைப்பு
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் சமீபத்தில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர், யானை தாக்கி இறந்துபோனார். இதற்கிடையே தற்போது மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானையை கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை நீலகிரி மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டது. இந்த யானை மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெறும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
----------

மேலும் செய்திகள்