தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-29 14:19 GMT
குண்டும், குழியுமான சாலை

கோவை நல்லட்டிபாளையத்திலிருந்து கோதவாடி செல்லும் வழியில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனால் அந்த சாலையால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி கீழே விழுந்து காயமடைந்து அவதி அடைந்து வருகின்றனர்.பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி பழுதடைந்த நிலையில் உள்ள சாலையை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

சம்பத்குமார், நல்லட்டிபாளையம்.

ஆபத்தாக தொங்கும் ஒயர்கள்

கோவை மாநகர பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிக்னல்களில் உள்ள கம்பங்களில் ஏராளமான முறையில் ஒயர்கள் சுற்றி வைக்கப்பட்டு உள்ளன. அவை பாதுகாப்பாக இல்லாமல் சாலையில் கிடக்கிறது. குறிப்பாக அவினாசி ரோட்டில் பல இடங்களில் இதுபோன்று ஒயர்கள் பாதுகாப்பு இல்லாமல் சாலையில் கிடப்பதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் ஒயர் மாட்டினால் விபத்து ஏற்படும் நிலை நிலவுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான முறையில் தொங்கும் ஒயர்களை அகற்றி, பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்.

விஜயகுமார், கோவை.


பொதுமக்கள் அவதி

பந்தலூர் நெல்லியாளம் பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
இந்த உணவகத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து குறைந்த விலையில் உணவுகள் வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள். தற்போது அம்மா உணவகத்தில் உள்ள கியாஸ் அடுப்பு பழுதடைந்து உள்ளது. அதனால் பொதுமக்கள் உணவின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த கியாஸ் அடுப்புகளை சீரமைக்கவும் புதிய கியாஸ்அடுப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ், நெல்லியாளம்.


குவிந்து கிடக்கும் குப்பைகள் 

வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதியில் வைக்கப்படும் நகராட்சி குப்பை தொட்டிகளை சுற்றுலா பயணிகள் கீழே தள்ளி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் சிதறி கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினந்தோறும் மாலையில் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்தாஸ், வால்பாறை.


விபத்துகள் அதிகரிப்பு

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் பலஇயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் பஸ்களில் சில பஸ்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், விபத்து ஏற்பட்டுவிடுமோ என பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே அரசு போக்குவரத்து அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி நிர்ணயத்த வேகத்தை விட மிக வேகமாக செல்லும் பஸ்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதாப், பொள்ளாச்சி.


இருக்கைகள் சீரமைக்கப்படுமா?

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியில்பொதுமக்கள் பஸ்க்கு காத்து இருக்கும்போது அமர்வதற்காக திறந்தவெளியில் சிமெண்டு  இருக்கைகள் அமைக்கப்பட்டது. இவ்வாறு, அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் தற்போது, மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே பழுதடைந்த இருக்கைகளை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

ஹரிகரன், பொள்ளாச்சி.

ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள்

கோத்தகிரி டானிங்டன் சதுக்கம் பகுதியில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த ஓடையில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்டுவதால், ஓடை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதுடன் நீரோடை நீரும் மாசடைய வாய்ப்புள்ளது. எனவே குப்பைகளை ஓடையில் கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக ஓடையில் இருந்து அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?
ராஜசேகர், கோத்தகிரி.


ஆபத்தான மின்கம்பம்

பந்தலூர் அருகே பொன்னானி பெரியபாலம் அருகே குன்றில்கடவுக்கு செல்லும் சிமெண்டு சாலையில் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது துருப்பிடித்தநிலையில்  எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்தநேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தாக மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயாண்டி, பந்தலூர்.

பல்லாங்குழி சாலை

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல சிிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் பல்லாங்குழி சாலையால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க முன் வரவேண்டும்.
ராணியம்மாள், கோவை.














மேலும் செய்திகள்