வெர்சோவா கடற்கரையில் சாக்குமூட்டையில் வீசப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு
வெர்சோவா கடற்கரையில் கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மும்பை,
வெர்சோவா கடற்கரையில் கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் உடல் மீட்பு
மும்பை அந்தேரி வெர்சோவா கடற்கரையில் கடந்த 28-ந்தேதி மாலை சாக்கு மூட்டை ஒன்று கயிற்றால் கட்டிய நிலையில் கரை ஒதுங்கியது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதனை பிரித்து பார்த்த போது இளம்பெண்ணின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். கை- கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப்பெண் உயிரிழந்து 2 நாட்கள் ஆன நிலையில் உடல் அழுகும் நிலையில் இருந்தது.
கோரேகாவை சேர்ந்தவர்
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காணாமல் போனவர்கள் பட்டியல் மூலம் யாரேனும் புகார் அளித்து உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோரேகாவ் மேற்கு குடிசை பகுதியை சேர்ந்த இளம்பெண் (வயது19) எனவும், கடந்த 26-ந் தேதி காணாமல் போனதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் விசாரணையை தீவிரப்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.