அந்தியூர், சத்தியமங்கலத்தில் கால்நடைகளுடன் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூர், சத்தியமங்கலத்தில் கால்நடைகளுடன் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-28 22:11 GMT
ஈரோடு
அந்தியூர், சத்தியமங்கலத்தில் கால்நடைகளுடன் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அந்தியூர்
‘வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உள்ளதால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே ஆடு, மாடு மேய்க்க வழங்கப்பட்ட தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும். தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கால்நடைகளுடன் வந்து அந்தியூர் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பர்கூர் வட்டார தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி,   அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன், மலைவாழ் மக்கள் சங்க பர்கூர் வட்டார செயலாளர் தங்கராசு ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
இதில் திரளான மலைவாழ் மக்கள் தங்களுடைய கால்நடைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மலைப்பகுதி தலைவர் துரைசாமி, நகர செயலாளர் வாசுதேவன், மாநில நிர்வாகி திருத்தணிகாசலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசியதுடன், எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களும் எழுப்பினர். 
இதில் ஏராளமான மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுடன் வந்து பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்