போலி தங்க கட்டி கொடுத்து ரூ.2½ லட்சம் மோசடி

சங்கரன்கோவிலில் போலி தங்க கட்டி கொடுத்து ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-28 21:18 GMT
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இலவன்குளம் ரோட்டைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பிரேமா (வயது 28). இவர் வீட்டில் அழகுநிலையம் நடத்தி வருவதுடன் ஜவுளி வியாபாரமும் செய்து வருகிறார். சங்கரன்கோவில் புதிய பார்வை தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவருடைய மனைவி அழகம்மாள் (35). இவர் பிரேமாவிடம் சேலை வாங்கியதில் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அழகம்மாள் தனது கணவர் சிவா கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார் என்றும், தங்களது சொந்த ஊர் சேலம் என்றும், தற்போது சங்கரன்கோவிலில் வசித்து வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் சிவா, அழகம்மாள் ஆகிய 2 பேரும் கட்டிட பணியின்போது தங்களுக்கு 200 கிராம் எடையுள்ள தங்க கட்டி புதையலாக கிடைத்ததாகவும், இதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய பிரேமா ரூ.2½ லட்சத்தை சிவா, அழகம்மாள் ஆகியோரிடம் கொடுத்து அந்த கட்டியை வாங்கி சென்றார். பின்னர் அதனை நகைக்கடையில் சோதித்து பார்த்தபோது, அது தங்கம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரேமா, இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்