பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி
சேலத்தில் செல்போன் வாங்கியதற்கு கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்து உள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:-
சேலத்தில் செல்போன் வாங்கியதற்கு கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்து உள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு பரிசு
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி ஜெயசித்ரா (வயது 31). இவர் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு செல்போன் வாங்கினேன். பின்னர் தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில் புதிதாக வாங்கிய செல்போன் நிறுவனத்தின் 13-ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பரிசாக ரூ.14 லட்சம் மதிப்பிலான கார் விழுந்து உள்ளது என்று அந்த கடிதத்தில் இருந்தது. பின்னர் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பரிசுத்தொகை பெறுவதற்கு சான்றிதழ்கள் தயார் படுத்த வேண்டும். அதற்காக ரூ.20ஆயிரம் அனுப்ப வேண்டும் என்று எனது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.
மோசடி
இதை நம்பி முதலில் ரூ.20 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பினேன். பின்னர் 26 தவணைகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 750 அனுப்பினேன். ஆனால் பரிசு விழுந்த கார் வழங்கவில்லை. பின்னர் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
அதன் பிறகு தான் பணம் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. எனவே மோசடி செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நூதன முறையில் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 750 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.