மாவட்ட மைய நூலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
நெல்லையில் மாவட்ட மைய நூலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நேற்று தமிழ் மரபில் கிறிஸ்தவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இந்த புத்தகத்தின் அட்டையில் நடராஜர் உருவம் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நூலை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட மைய நூலகத்துக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில், மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் சுடலை ராஜசெல்வம், நிர்வாகிகள் நமசிவாயம், சங்கர், சுரேஷ், விமல் உள்ளிட்டோர் வந்து முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி முருகன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதே நேரத்தில் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் பேசி, நூல் வெளியிடுவதற்கு தடை விதித்தனர். இவ்வாறு தடை விதிக்கப்பட்ட தகவலை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட மைய நூலக பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.