கல்லூரி விடுதியின் 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உகாண்டா மாணவி சாவு
பெங்களூரு அருகே கல்லூரி விடுதியின் 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உகாண்டா மாணவி பலியானார். விடுதி மீது கற்கள் வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு உண்டானது.
பெங்களூரு:
உகாண்டா மாணவி சாவு
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அங்கு உகாண்டா நாட்டை சேர்ந்த ஆசினா உவாசே (வயது 24) என்ற மாணவி பி.பி.ஏ. படித்து வந்தார். கல்லூரியின் விடுதியில் ஆசினா தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு விடுதியின் 7-வது மாடியில் காயப்போட்டு இருந்த துணிகளை எடுப்பதற்காக ஆசினா சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக 6-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில், அவர் தலையில் பலத்தகாயம் அடைந்து ஆசினா உயிருக்கு போராடினார். பின்னர் ஆசினாவை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
விடுதி மீது கற்கள் வீச்சு
இதற்கிடையில், விடுதியின் 6-வது மாடியில் இருந்து ஆசினா தவறிவிழுந்து ஒரு மணிநேரம் உயிருக்கு போராடியதாகவும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க தாமதம் செய்ததாகவும், அதனால் தான் உயிர் இழந்திருப்பதாகவும் சக மாணவ, மாணவிகள் குற்றச்சாட்டு கூறினார்கள். மேலும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆசினா உயிர் இழந்ததாக கூறி, விடுதியின் மீது மாணவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினாா்கள். இதில், விடுதியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் மற்றும் தொட்டபள்ளாப்புரா போலீசார் விரைந்து சென்று மாணவர்களுடன் சமாதானமாக பேசினார்கள். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். போலீஸ் விசாரணையில், ஆசினா கால் தவறி மாடியில் இருந்து விழுந்ததில் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.