கர்நாடகத்தில் கன்னடத்திற்கு தான் முன்னுரிமை; டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-04-28 20:21 GMT
பெங்களூரு:

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மொழி சுயமரியாதை

  இந்தி மொழி விஷயத்தில் நடிகர்கள் சிலர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதுபற்றி பேச விரும்பவில்லை. நாட்டில் எந்தெந்த மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. நமது நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழி சுயமரியாதை உள்ளது. நமது மாநிலத்தில் குடகு, மங்களூரு பகுதிகளில் வேறு மொழிகளை பேசுகிறார்கள்.

  ஆனால் அவர்களை புறக்கணிக்க முடியாது. நாம் அனைவரும் கன்னடர்கள். நமக்கு நமக்கே உரித்தான மொழி, கொடி, சுயமரியாதை உள்ளது. ரூபாய் நோட்டுகளில் கன்னடம் உள்பட சில மாநில மொழிகள் அச்சிடப்படுகின்றன. இந்த நோட்டுகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் மொழி விஷயத்தில் விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

கன்னடத்திற்கு முன்னுரிமை

  நாட்டின் வடக்கு பகுதியில் இந்தி மொழி பேசப்படுகிறது. அங்கு அந்த மொழிக்கு மரியாதை வழங்கப்படுகிறது. ஒருவேளை மத்திய மந்திரிகள் யாராவது இந்தி மொழி தான் தேசிய மொழி என்று கூறினால் அதற்கு உரிய பதில் தரப்படும். நமது நிலம், நீர், மொழியை பாதுகாப்பது நமது கடமை. கர்நாடகத்தில் கன்னடத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  பிறகு அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள பிற மொழிகளையும் பயன்படுத்தலாம். கர்நாடகத்தை சேர்ந்த சில எம்.பி.க்கள் கன்னடத்தில் பேசுகிறார்கள். இதற்கு அனுமதி உள்ளது. எனது சகோதரர் டி.கே.சுரேஷ் பல முறை நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால், இந்தியில் பேசுகிறார். நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தில் நமது கன்னட மொழியின் கவுரவத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை அனைவரும் சேர்ந்து செய்யலாம்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்