தஞ்சை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுநூலகம்
தஞ்சை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுநூலகம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வக்கீல்களுக்காக அமைக்கப்பட்ட பொது நூலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். புத்தகம் வாசிப்பது தனி மனிதனின் சிந்தனையை தூண்டுவதோடு, சமுதாயத்தில் அதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் பிரச்சினைகளோடு வரும்பொழுது மக்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தை புத்தகம் வாசிப்பதன் மூலம் ஒரு மாற்றம் உருவாக்கும். அதனால் பொது மக்கள் கூடுகின்ற இந்த இடத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பொது நூலகம் அமைப்பது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நீதிபதிகள் மலர்விழி, சுந்தர்ராஜன், வக்கீல் சங்க தலைவர் அமர்சிங், செயலாளர் சசிகுமார், வக்கீல்கள், நீதிபதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா செய்திருந்தார்.